

கீவ்,
உக்ரைன் நகரங்களை உருக்குலைத்து வரும் ரஷிய படைகளின் தாக்குதல்கள் 2-வது மாதத்தை எட்டி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:
ஏப்ரல் 22, 4.00 PM
உக்ரைன் போர் தோல்வி: ரஷியாவுக்கு சாதகமாக மாற்றிய கசாப்புக்கடைக்காரர் தளபதி
ஏப்ரல் 22, 3.00 P.M
உக்ரைனில் 2,345 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - ஐ.நா தகவல்
உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் 2,345 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐநா உறுதி செய்துள்ளது.
பிப்ரவரி 24 அன்று ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 20 நள்ளிரவு வரை உக்ரைனில் 5,264 பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு உறுதி செய்துள்ளது.
ஏப்ரல் 22, 2.00 P.M
உக்ரைனுக்கு நவீன போர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
எதிரிகளின் இலக்குகள் மீது மோதி வெடிக்கும் அதிநவீன டிரோன்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க உள்ளது.
தலைநகர் கீவை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்ட ரஷிய படைகள், கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதி நோக்கி தங்கள் கவனத்தை திருப்பின. சமதள பகுதியான டான்பாஸில், எதிரிகளின் இலக்கு மீது துல்லியமாக மோதி வெடித்து சிதறும் பீனிக்ஸ் கோஸ்ட் டிரோன்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க உள்ளது.
ராணுவ வீரர்கள் எளிதாக பையில் வைத்து சுமந்து செல்லக்கூடிய இவ்வகை டிரோன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
உக்ரைனுக்கு அனுப்பப்பட உள்ள ஆயுதங்களுடன் சேர்த்து 121 பீனிக்ஸ் கோஸ்ட் டிரோன்களும் அனுப்பப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபோன்ற டிரோன்களை இயக்க உக்ரைன் வீரர்கள் சிலருக்கு ஏற்கனவே அமெரிக்காவில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22, 1.00 P.M
மரியுபோல் நகரை ரஷியா கைப்பற்றினாலும் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் வசம் உள்ளது - ஜெலென்ஸ்கி
ரஷியப் படைகள் கைப்பற்றிய மரியுபோல் நகரில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரை ரஷ்யப் படைகள் பெரும்பான்மையாக கைப்பற்றினாலும், சில பகுதிகள் இன்னும் உக்ரைன் ராணுவத்தின் வசம் உள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அசோவ்ஸ்டல் எஃகு தொழிற்சாலையின் கட்டுப்பாடு இன்னும் உக்ரைன் வீரர்கள் வசம் உள்ளதாக அதிபர் குறிப்பிட்டார்.
இதனிடையே உக்ரைனுக்கு கூடுதலாக 686 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக டென்மார்க் அறிவித்துள்ளது. ஸ்பெயினும் தன் பங்குக்கு ராணுவ உதவி வழங்குவதாக கூறியுள்ளது.
ஏப்ரல் 22, 12.00 P.M
மனிதாபிமான வழித்தடங்கள் ஏதும் இல்லை - உக்ரைன் அரசு
"இன்றைய பாதைகளில் உள்ள ஆபத்து காரணமாக" இன்று உக்ரைன் முழுவதும் மனிதாபிமான தாழ்வாரங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என உக்ரைனின் துணை பிரதமர் ஐரினா வெரிஷ்சக் கூறியுள்ளார். மேலும் வெளியேற்றத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: பொறுமையாக இருங்கள், தயவுசெய்து காத்திருங்கள் என கூறியுள்ளார்.
ஏப்ரல் 22, 11.00 A.M
அமெரிக்க துறைமுகத்தில் ரஷிய கப்பல் நுழைய தடை
அமெரிக்கா தனது துறைமுகங்களில் ரஷிய கப்பல்கள் நுழைய தடை விதித்துள்ளது. "ரஷியக் கொடியின் கீழ் பயணிக்கும் அல்லது ரஷிய நிறுவனத்திற்கு சொந்தமான அல்லது இயக்கப்படும் எந்தக் கப்பலும் அமெரிக்க துறைமுகத்தில் நிறுத்தவோ அல்லது எங்கள் கரைக்கு நுழையவோ அனுமதிக்கப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஏப்ரல் 22, 10.00 A.M
கெர்சன் பகுதியில் ஷெல் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் வெளியேற்ற முடியவில்லை - உக்ரைன் ராணுவம்
ரஷியப் படைகளின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக கெர்சன் பிராந்தியத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் வரையிலான திட்டமிடப்பட்ட மனிதாபிமான பாதை முன்னோக்கி செல்லவில்லை என்று உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22, 9.00 A.M
ரூபிஸ்னே நோக்கி முன்னேறும் ரஷியப் படைகள்: உக்ரைன் ராணுவம்
ரஷிய இராணுவம் 25 பட்டாலியன் தந்திரோபாய குழுக்களை குவித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அதன் சமீபத்திய புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.
அங்கிருந்து, அவர்கள் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள ஜாவோடியின் குடியேற்றத்தின் திசையில் தாக்குதலைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 22, 8.00 A.M
9000 ஆயிரம் உக்ரைனை மக்களை புதைத்த ரஷியா
செயற்கைக்கோள் படங்கள் மரியுபோலுக்கு வெளியே உள்ள மன்ஹுஷ் நகரத்தில் இருக்கும் கல்லறையிலிருந்து நீண்ட வரிசையாக நீண்ட கல்லறைகளைக் காட்டுகின்றன.
துறைமுக நகரத்தின் முற்றுகையின் போது படுகொலை செய்யப்பட்டதை மறைக்க ரஷியா 9,000 உக்ரைன் குடிமக்களை புதைத்ததாக உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏப்ரல் 22, 7.00 A.M
உக்ரைனுக்கு 37 மில்லியன் யூரோக்களை வழங்க ஜெர்மனி உறுதி
ரஷிய தாக்குதலில் சின்னாபின்னமான நகரை புனரமைக்க ஜெர்மனி மேலும் 37 மில்லியன் யூரோக்கள் ($40m) வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 22, 06.00 a.m
வெளியேற்றப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் 3 பேருந்துகள் மரியுபோலில் இருந்து சபோரிஜியாவிற்கு வந்தடைந்ததாக தகவல்
உக்ரேனிய நகரமான மரியுபோலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் நிரப்பப்பட்ட மூன்று பள்ளி பேருந்துகள் ரஷியப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி வழியாக வியாழன் அன்று, கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சபோரிஜியாவை வந்தடைந்ததாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22, 05.16 a.m
கிரிமியாவை ரஷிய நிலப்பரப்புடன் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
உக்ரேனிய அதிகாரி ஒருவர் கிரிமியாவை ரஷிய நிலப்பரப்புடன் இணைக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாலத்திற்கு எதிராக உக்ரேனிய வான்வழித் தாக்குதலின் சாத்தியத்தை உறுதிபடுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 22, 04.49 a.m
மேலும் கனரக ஆயுதங்களை அனுப்ப உலகை வலியுறுத்துகிறார் ஜெலென்ஸ்கி
ரஷியா தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் அதிக கனரக ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 22, 04.05 a.m
குண்டுவீச்சு தாக்குதல் காரணமாக நேற்று மரியுபோலில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படவில்லை.
"சந்திப்பு இடத்திற்கு அருகில் குண்டுவீச்சு தாக்குதல் தொடங்கியது, இது எங்களை தாழ்வாரத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறினார். சிக்கியுள்ள மரியுபோல் குடியிருப்பாளர்களை வெளியேற்ற உக்ரைன் தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 22, 03.29 a.m
உக்ரேனிய மீட்பவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் இஸ்ரேல்
இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் நேற்று முன் தினம் குண்டு துளைக்காத உள்ளாடைகள் மற்றும் தலைக்கவசங்களை உக்ரைனுக்கு வழங்க ஒப்புதல் அளித்தார். இதன்படி உக்ரைனுக்கு உபகரணங்களை வழங்குவதற்கான இஸ்ரேலின் நிலைப்பாட்டை மாற்றுவதைக் குறிக்கிறது.
ஏப்ரல் 22, 02.46 a.m
கிழக்கு உக்ரைனில் ரஷியா முன் வரிசையில் படைகளை நிரப்புகிறது.
சி.என்.என். (CNN) மேற்கோள் காட்டிய ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியின் கூற்றுப்படி, ரஷியா கிழக்கு உக்ரைனில் தனது படைகளை தொடர்ந்து பலப்படுத்துகிறது, அதன் மொத்த குழுக்களின் எண்ணிக்கையை 85 ஆகக் கொண்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலோர் டான்பாஸில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 22, 01.18 a.m
ரஷியாவை விட உக்ரைனில் அதிக டாங்கிகள் இருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
உக்ரேனியப் படைகள் ரஷிஷ்யர்களை விட உக்ரைனில் அதிக டாங்கிகளை வைத்துள்ளனர், "அவற்றைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு நிச்சயமாக அதிகாரம் உள்ளது" என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறினார்.
ஏப்ரல் 22, 12.36 a.m
மரியுபோல் நகரை கைப்பற்றியது, ரஷியா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபோது, அதன் கண் இரண்டு முக்கிய நகரங்கள் மீது பதிந்தது. ஒன்று, தலைநகர் கீவ். மற்றொன்று துறைமுக நகரான மரியுபோல்.
கீவ் நகரை கைப்பற்ற வேண்டும் என்ற ரஷியாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கீவ் மற்றும் அதன் புறநகர்களில் கட்டிடங்களை, ராணுவ கட்டமைப்புகளை அழித்தாலும், தலைநகரை பிடிக்க முடியாமல் ரஷிய படைகள் பின்வாங்கின.
அதே நேரத்தில் மற்றொரு முக்கிய நகரமான மரியுபோல் மீதான ரஷிய படைகளின் முற்றுகை, இன்று நேற்றல்ல, போர் தொடங்கிய நாளில் இருந்து (பிப்ரவரி 24) தொடங்கி விட்டது. அந்த நகரின் மீது கணக்கிலடங்கா தாக்குதல்களை ரஷிய படைகள் நடத்தி, ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து, பூமியின் நரகம் என்று சொல்கிற நிலைக்கு அந்த நகரத்தை உருக்குலைந்து போக வைத்தது. அங்கு சிக்கியுள்ள 1 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, பிற அடிப்படை வசதிகள் இன்றி அல்லாடி வந்தனர்.
மரியுபோல் நகரம், ரஷியாவால் கைப்பற்றப்பட்ட கிரீமியாவுக்கும், பிரிவினைவாதிகளை அதிகமாக கொண்ட டோன்பாசுக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்துள்ளது. இந்த நகரை பிடித்து விட்டால் அந்த பிராந்தியமே ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும், அது மட்டுமின்றி, மரியுபோலை கைப்பற்றுவது நிலம் சார் நன்மைகள் மட்டுமின்றி ரஷ்யாவுக்கு கடல்சார் நன்மைகளையும் அளிக்கும், கருங்கடலை ஒட்டியுள்ள பெரும்பாலான பிராந்தியங்களும் ரஷ்யாவின் கைக்கு வருகிறபோது, உக்ரைனின் கடல்வழி வர்த்தகமும் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் மரியுபோல் மீது ரஷியா, கடுமையான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு அந்த நகரை அழித்தது.
ஆனால் 10 சதுர கி.மீ. பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ள அஜோவ் உருக்காலை உக்ரைன் படைகள் வசம் இருந்து வருகிறது. அங்கு போரில் காயம் அடைந்திருந்த 500 வீரர்களும், பெண்களும், குழந்தைகளும் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் அடைக்கலம் புகுந்திருந்தனர். அதில் உள்ள உக்ரைன் படையினர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைவதற்கு கடைசியாக நேற்று முன்தினம் வரை ரஷியா கெடு விதித்தது. ஆனால் உக்ரைன் படைகள் சரண் அடைவதில்லை என்ற தெளிவான நிலையை எடுத்தன. இதனால் அடுத்து என்ன ஆகும், அங்கிருப்போர் கதி என்னவாகும் என்ற பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் போரில் மரியுபோல் நகரைக் கைப்பற்றி, வெற்றி கிடைத்து இருப்பதாகவும், அந்த நகரம் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று அறிவித்தார். இதையொட்டி அவர் கிரெம்ளின் மாளிகையில் தனது ராணுவ மந்திரி செர்ஜி சோய்குவுயடன் தோன்றி கூறியதாவது:-
ரஷியாவின் முற்றுகையின்கீழ் 2 மாதங்கள் தப்பிப்பிழைத்த பின்னர் இறுதி மோதலுக்கு அவசியம் இல்லை.
தொழில்துறை மண்டலத்தின் (உருக்காலை) மீது தாக்குதல் நடத்தி தகர்க்க தேவையில்லை. அந்த தாக்குதல் உத்தரவை ரத்து செய்கிறேன். அதே நேரத்தில் அந்த தொழிற்சாலையினுள் ஒரு ஈ கூட நுழைந்திடாமல் தடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த ஆலைக்குள் 2 ஆயிரம் உக்ரைன் துருப்புகள் இருப்பார்கள் என்று ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி சோய்கு தெரிவித்தார். அவர்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைந்தால், ரஷியா மரியாதையுடன் நடத்தும் என்று புதின் அறிவித்தார்.
மரியுபோல் நகரில் வெற்றி கிடைத்திருப்பதாக புதின் அறிவித்து இருப்பது, போர் தொடங்கி தலைநகர் கீவை கைப்பற்ற முடியாமல் போன பிறகு ரஷியாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசாக பார்க்கப்படுகிறது. .
உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறும்போது, இந்த ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற மனிதாபிமான வழித்தடம் அமைக்க முயற்சித்து, அது நடைபெறாமல் போய்விட்டது. அங்கிருந்து ஆயிரம் மக்களும், காயம் அடைந்த 500 வீரர்களும் வெளியே கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே அந்த நகரில் இருந்து 4 பஸ்களில் பொதுமக்கள் தப்பிக்க முடிந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரியுபோலில் சிக்கியுள்ள மக்களின் உயிரைக்காப்பாற்ற எந்த வகையான பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் அறிவித்துள்ளார்.
தெற்கு நகரமான கெர்சனில் தங்களுக்காக சண்டையிட உள்ளூர் மக்களை பலவந்தமாக அணி திரட்ட ரஷியா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறுகிறது. மேலும் அங்கு கசாச்சி லகாரியா கிராமத்தில் எந்திர துப்பாக்கிகள், லாஞ்சர்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு ஆயுதக்கிடங்கை ரஷிய படைகள் கண்டுபிடித்துள்ளன.
கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 80 சதவீத பகுதிகளை ரஷியா வசப்படுத்தி உள்ளதாக அதன் கவர்னர் செர்ஹிவ் ஹைதய் தெரிவித்தார்.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் ரஷிய படைகள் தாக்குதல்களை தொடர்வதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. அதே நேரத்தில் 9 ரஷிய தாக்குதல்களை உக்ரைன் படைகள் முறியடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.