

மாஸ்கோ,
ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷிய போரில், கருங்கடலில் இருந்து கடல் வழி தாக்குதலை தலைமையேற்று நடத்தியது, மோஸ்க்வா என்ற பிரமாண்ட போர்க்கப்பல் ஆகும். இந்த கப்பல் கடந்த 13-ந் தேதி தீப்பிடித்து பின்னர் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து கப்பல் தீப்பற்றியதாக ரஷியா கூறியது.
ஆனால், உக்ரைன் பாம்புத்தீவில் இருந்து தங்கள் நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 நெப்டியூன் ஏவுகணைகளை ஏவி, மோஸ்க்வா கப்பல் தாக்கப்பட்டதாக கூறியது. இந்த கப்பலில் 510 மாலுமிகள் இருந்ததாகவும், பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுவிட்டதாகவும் ரஷிய ராணுவ தரப்பில் தகவல்கள் வெளிவந்தன.
குடும்பத்தினர் தேடல்
ரஷிய போர்க்கப்பலில் பணியாற்றிய தங்கள் மகன்களைப் பற்றி தகவல் இல்லை என்று கூறி குடும்பத்தினர்கள் பரிதவித்துக்கொண்டு தேடத்தொடங்கினர். இது தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடத்தொடங்கினர்.
கிரீமியாவை சேர்ந்த சிக்ரெபெட்ஸ் என்பவர் சமூக வலைத்தளத்தில், கப்பலில் இருந்து ஒட்டுமொத்த குழுவினரும் வெளியேற்றப்பட்டதாக ராணுவம் கூறியது ஒரு பொய். அப்பட்டமான, இழிவான பொய் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், அந்த கப்பல் தளபதிகள் என்னிடம் சொன்னதுபோல் என் மகன் காயம் அடைந்தவர்கள், இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவன் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளான். திறந்த கடலில் காணவில்லையா? என கேட்டுள்ளார்.
ரஷியா அறிக்கை
இந்நிலையில், இப்போது ரஷிய ராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மோஸ்க்வா கப்பல் தீயில் சிக்கி அதன் சிப்பந்தி ஒருவர் பலியாகி விட்டதாகவும், 27 பேர் காணாமல் போய் இருப்பதாகவும், 396 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முதலில் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக கூறியது பற்றி இப்போது ரஷிய ராணுவ அமைச்சகம் எந்த விளக்கமும் கூற வில்லை.
ரஷிய போர்க்கப்பலில் பணியாற்றிய தங்கள் மகன்களைப் பற்றி தகவல் இல்லை என்று கூறி குடும்பத்தினர்கள் தேடத்தொடங்கிய பின்னர்தான், ரஷிய ராணுவ அமைச்சகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆனால் ,அந்தக் கப்பல் படங்களோ, மீட்பு நடவடிக்கை படங்களோ வெளியாகவில்லை. இது சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களின் பெற்றோர், தங்கள் மகன்களுக்கு நேரிட்டது என்ன என்பது பற்றிய உண்மையைத் தேட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வளவு நடந்தும் மோஸ்க்வா கப்பல் மீதான உக்ரைன் ஏவுகணை தாக்குதலை ரஷியா ஒப்புக்கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.