

பமாகோ,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, மாலி அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது.
அதேவேளை, ராணுவத்திற்கும் , கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. வடக்கு மாலியை தனிநாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்கு எதிராக தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பமாகோ உள்பட பல்வேறு நகரங்கள் மீது அல்கொய்தா உள்பட பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுடனான மோதலை தொடர்ந்து மாலி அரசுக்கு ரஷியா ஆயுத உதவி வழங்கியுள்ளது. கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தவும், கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்கவும் இந்த ஆயுத உதவியை ரஷியா செய்துள்ளது. கப்பல்கள் மூலமாகவும், விமானங்கள் மூலமாகவும் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.