

மாஸ்கோ,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா நேற்று அங்கீகரித்தது.
உக்ரைனின் பகுதிகளாக உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் நகரங்களில் படைகளை களமிறக்க ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டதைத்தொடர்ந்து, அந்த பகுதிகளில் ரஷியா தனது படைகளை நிலைநிறுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் போர் அச்சுருத்தல் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷியா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள ரஷிய தூதர்கள் பல அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் அவர்கள் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிளர்ச்சிப் பகுதிகளை ரஷியா அங்கீகரித்ததைத் தொடர்ந்து, உக்ரைனில் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு அதிபர் விளாடிமிர் புதினுக்கு அனுமதி வழங்க ரஷிய நாடாளுமன்றம் வாக்களித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.