#லைவ் அப்டேட்ஸ்: பொருளாதார தடைகளால் மேலை நாடுகளுக்கே பாதிப்பு - புதின்

பொருளாதாரத் தடைகளால் ரஷியாவை விட மேலைநாடுகளுக்கே பாதிப்பு அதிகம் என அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
(Credits: AP)
(Credits: AP)
Published on

கீவ்,

உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-

மே 13, 1.00 P.M

பொருளாதாரத் தடைகளால் ரஷியாவை விட மேலைநாடுகளுக்கே பாதிப்பு அதிகம் என அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து ரஷியா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதையடுத்து உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளால் பல நாடுகள் உணவுத்தட்டுப்பாடு அபாயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

மே 13, 12.00 P.M

உக்ரைன் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த அஜோவ்டஸ் நகரை தாக்கும் ரஷியப் படைகள்

ரஷியப் படைகள் மரியுபோல் துறைமுகத்தின் மீது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன எனவும் அஜோவ்டஸ், ஸ்டீல்வேர்க்சில் உக்ரைன் வீரர்கள் முன்னேறுவதில் தடுப்பதில் ரஷியா கவனம் செலுத்துவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

மே 13, 11.00 A.M

லுஹான்ஸ்கில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் 2 பேர் பலி

லுஹான்ஸ்க் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா நடத்திய ஷெல் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 60 வீடுகளை நாசமடைந்துள்ளதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மே 13, 06.00 a.m

ரஷிய அதிபர் புதினுடன் பேச தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டு தொலைக்காட்சிக்கு ஒன்று பேட்டி அளித்த அவர், ரஷிய ராணுவம் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

மே 13, 05.33 a.m

உக்ரைன் பள்ளிகள் மீது குண்டுகள் வீசிவது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. ராணுவ நோக்கங்களுக்காக பள்ளிகளை பயன்படுத்துவது கண்டித்தது என்றும், உக்ரைனில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் கனரக பீரங்கி மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறுவதாகவும் ஐ.நா குழந்தைகள் நிதிய துணை நிர்வாக இயக்குனர் உமர் அப்டி குற்றம் சாட்டி உள்ளார்.

மே 13, 04.11 a.m

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா, உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் நிலையானது என்று தெரிவித்தார். இரு தரப்பினரும், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது என அவர் கூறினார்.

உக்ரைன் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு, இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், இந்த போரின் தொடக்கத்தில் இருந்தே, அமைதி பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகளை இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களை பலி கொடுத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது என்பதை இந்தியா நம்புகிறது என்றும் ரவீந்திரா தெரிவித்தார்.

மே 13, 03.51 a.m

உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பிற்குப் பின்னர் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கும் தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 33 நாடுகளும் எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

மே 13, 03.29 a.m

'திருடப்பட்ட' தானியங்களை விற்பனை செய்வதில் ஈடுபடக்கூடாது - உக்ரைன் எச்சரிக்கை

உக்ரைன் நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷியாவால் கைப்பற்றப்பட்ட தானியங்களை விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைவரும் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

"இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பாளர்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்: திருடப்பட்டது யாருக்கும் மகிழ்ச்சியைத் தரவில்லை. திருடப்பட்ட தானியங்களை விற்பது, கொண்டு செல்வது அல்லது வாங்குவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ள அனைவரும் குற்றத்திற்கு உடந்தையாக உள்ளனர் என்று டிமிட்ரோ குலேபாவை மேற்கோள் காட்டி உக்ரைன் அமைச்சகத்தின் செய்திச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 13, 03.02 a.m

நேட்டோவுக்கு ஆதரவு: பின்லாந்துக்கு மாஸ்கோ எச்சரிக்கை

நேட்டோ நாடுகளின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க முற்படுவதால் பின்லாந்து கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மாஸ்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 13, 02.38 a.m

'முதுகில் சுடப்பட்டது': உக்ரைனில் ரஷியா போர்க்குற்றம் செய்ததாக குற்றச்சாட்டு

இரண்டு ஆயுதம் இல்லாத பொதுமக்களை கீவ்வுக்கு வெளியே சுட்டுக் கொன்றது உட்பட, ரஷியப் படைகள் செய்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான போர்க்குற்றங்களை உக்ரேனிய வழக்குரைஞர்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான பாதுகாப்பு கேமரா காட்சிகளில், இரண்டு உக்ரேனிய பொதுமக்கள் ரஷிய படையினரால் கீவ் நகருக்கு வெளியே ஒரு கார் டீலர்ஷிப் அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் அந்த இடத்திலேயே இறந்தார், மற்றவர் சிறிது நேரத்தில் இறந்தார். இந்த தாக்குதலை ஒரு போர்க்குற்றமாக வழக்குரைஞர்கள் விசாரித்து வருவதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 13, 01.31 a.m

உக்ரைனில் விசாரணை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) தீர்மானத்திற்கு எதிராக சீனா வாக்களிப்பு

உக்ரைன் விசாரணையை அமைக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்திற்கு எதிராக சீனா நேற்று வாக்களித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 13, 12.40 a.m

செர்னிஹிவ் நகரத்தில் ரஷியா வான்தாக்குதல்: 3 பேர் பலி; வெடிமருந்து கிடங்குகள் அழிப்பு

உக்ரைனில் மரியுபோல் நகரை இன்னும் ரஷிய படைகள் பிடித்தபாடில்லை. இந்த நகரின் கடைசி கோட்டையாக கருதப்படுகிற அஜோவ் உருக்காலை இன்னும் வீழ வில்லை. அந்த உருக்காலையினுள் சுமார் ஆயிரம் உக்ரைன் படை வீரர்கள் சுரங்கங்களில் உள்ளனர். அவர்களில் பலர் காயங்களுடன் உள்ளனர். அங்கு நேற்றும் ரஷிய படைகள் வான்தாக்குதல் நடத்தின.

இந்த ஆலையில் படுகாயங்களுடன் உள்ள போர் வீரர்களை விடுவித்து அதற்கு பதிலாக ரஷிய போர்க்கைதிகளை விடுவிக்க உக்ரைன் முன்வந்துள்ளது. இதில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஆனாலும், பல்வேறு விருப்ப தேர்வுகள் இருந்தாலும் எதுவுமே சிறந்தது இல்லை என்று உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் ரஷியா குண்டு வீச்சைத் தொடர்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரியுபோல் நகர மேயரின் ஆலோசகர், நகரில் இருந்து வெளியேறுவதற்கான அனைத்து வழிகளையும் ரஷிய படைகள் தடை செய்துவிட்டதாக தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே உக்ரைனில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 62 வயதான அப்பாவி உள்ளூர்வாசியை சுட்டுக்கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டு பிடிபட்ட ரஷிய வீரர் வாடின் சிஷிமர் மீது கீவ் போர்க்குற்ற விசாரணை நடத்துகிறது.

மரியுபோல் நகரிலிருந்து தப்பிச்செல்லும் மக்களுக்கு புகலிடமாக உள்ள ஜபோரிஜியாவில் உக்ரைன் படை வீரர்களை குறிவைத்து, ரஷிய படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதுடன் லாஞ்சர்கள் உதவியுடன் கையெறி குண்டுகளை வீசியது.

இதேபோன்று கார்கிவ் நகருக்கு வடக்கே உள்ள உக்ரைனிய படையினரை குறிவைத்து ரஷிய படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளன.

இருப்பினும் கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் முன்னேற்றத்தில் வேகம் குறைந்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷிய படையினரின் 9 தாக்குதல்களை உக்ரைன் படைகள் முறியடித்ததும், டிரோன்களையும், ராணுவ வாகனங்களை அழித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செர்னிஹிவ் நகர பகுதியில் ஒரே இரவில் ரஷிய படைகள் நடத்திய வான்தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல்களை உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கிருந்த 2 வெடிமருந்து கிடங்குகளை தங்கள் படைகள் தாக்கி அழித்துள்ளதாக ரஷியா தெரிவித்தது.

மேலும் கார்கிவ் பகுதியில் உக்ரைனின் எஸ்-300 வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பையும், ஒடேசா நகருக்கு அருகில் உள்ள ரேடார் நிலையத்தையும் ரஷியா அழித்ததாக அதன் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார்.

படையெடுப்பின் முதல் நாளில் ரஷியாவால் வீழ்த்தப்பட்ட பாம்பு தீவின் அருகே உக்ரைனின் டிரோனை வீழ்த்தியதாகவும் ரஷியா கூறியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com