கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் சாதனை

கைகளை மட்டுமே பயன்படுத்தி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ருஸ்தம் நபீவ் படைத்துள்ளார்.
கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் சாதனை
Published on

காத்மாண்டு,

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், நேபாளம்-திபெத் எல்லை இமயமலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது சாதனைப் பயணம் ஆகும். மலையேற்ற சீசன்களில் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தங்கள் சாதனையை பதிவு செய்கின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர்.

இந்நிலையில், இரண்டு கால்களையும் இழந்த ரஷ்ய மலையேற்ற வீரர் ஒருவர், கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் ருஸ்தம் நபீவ். இவர் ரஷ்யாவின் பாராசூட் படையில் வீரராக பணியாற்றினார். கடந்த 2015-ஆம் ஆண்டு, அவர் தூங்கிக்கொண்டிருந்த ராணுவ குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கொடூர விபத்தில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். அந்த விபத்தில் ருஸ்தம் உயிர் பிழைத்தாலும், அவரது இரண்டு கால்களையும் இழக்க நேரிட்டது.

இதனால் முடங்கிப் போகாமல், மலையேற்றப் பயிற்சிகளை மேற்கொண்டார். கைகள் மூலம் மலையேறும் பயிற்சிகளை செய்தார். அதன்பின்னர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன்படி, நேபாளத்தில் தற்போது நடைபெற்று வரும் வசந்தகால மலையேற்ற சீசனில் பங்கேற்ற அவர், மே 20 ஆம் தேதி நேபாள நேரப்படி காலை 8:16 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை சாதனை படைத்தார். இதன் மூலம் மலையேற்ற வரலாற்றில் முதன்முறையாக, கால்கள் இல்லாத நிலையில் கைகளால் மட்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற சாதனையை ருஸ்தம் நபீவ் படைத்துள்ளார்.

இதுபற்றி ருஸ்தம் நபீவ் கூறுகையில், “என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த ஏற்றத்தை நான் அர்ப்பணிக்கிறேன். இதன் மூலம், நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்: உங்கள் உடலில் உயிர் இருக்கும்வரை போராடுங்கள். தயவுசெய்து இறுதிவரை போராடுங்கள். அது உங்கள் வாழக்கையை முன்னேற்றும்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com