

பெய்ஜிங்,
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக சீனா உருவெடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், சீனா ரஷியாவுடன் வர்த்தக உறவை தொடர்ந்து பேணி வருகிறது.
இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திப்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (புதன்கிழமை) சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது சீன பயணத்தை முடித்த சில நாட் களிலேயே இந்த சந்திப்பு நடைபெறுவது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த பயணத்தின் போது, சீனா-ரஷியா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. கடந்த 2001-ம் ஆண்டு கையெழுத்தான சீனா-ரஷியா நட்பு ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு நிறைவையொட்டி இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த நிலையில் சீன பயணத்திற்கு முன் புதின் வெளியிட்ட வீடியோ உரையில், ரஷியா-சீனா உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளதாகவும், உலக அரசியலில் இந்த உறவு முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு சென்றிருந்த புதினை, பழைய நண்பர் என்று ஜி ஜின்பிங் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.