

பாங்காக்,
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் சிறந்த வங்கி என்ற பெருமையை பெற்று சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச புகழ்பெற்ற நிதித்துறை இதழான 'குளோபல் பைனான்ஸ்' ஆண்டுதோறும் உலகளவில் சிறந்த முறையில் செயல்படும் வங்கிகளைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நுகர்வோர் வங்கியாக இந்தியாவின் எஸ்பிஐ-யை அந்த இதழ் தேர்வு செய்துள்ளது. அத்துடன், 'இந்தியாவின் சிறந்த வங்கி' என்ற விருதும் எஸ்பிஐ வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரம்மாண்ட விருது வழங்கும் விழாவில், எஸ்பிஐ வங்கியின் சேர்மன் ஸ்ரீனிவாசலு ஷெட்டி கலந்துகொண்டு இந்த இரு உயரிய சர்வதேச விருதுகளையும் நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
இந்த சர்வதேச விருது ஒட்டுமொத்த எஸ்பிஐ குடும்பத்திற்கும் கிடைத்த பெருமையாகும். ஒரு நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கியின் பிரம்மாண்டமும், அந்த நாட்டு மக்களின் பேராசைகளும் இணையும் போது என்ன மாதிரியான சாதனை சாத்தியம் என்பதற்கு இந்த விருது ஒரு சான்றாகும் என்று எஸ்பிஐ வங்கியின் சேர்மன் ஸ்ரீனிவாசலு ஷெட்டி தெரிவித்தார்.