

காபூல்
ஆப்கானிஸ்தானில் இன்றிரவு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், டெல்லி மற்றும் காஷ்மீரிலும் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இன்று இரவு 7.04 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 215 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கம் தொடர்ச்சியாக, இந்தியாவின் வடமாநிலங்களிலும் கடுமையான நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலையில் ஒரு நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் குலுங்கின.
ரிக்டர் அளவுகோலில் முதலில் 7.1 என்ற அளவிலும், பின்னர் 7.5 என்ற அளவிலும் இரு நிலநடுக்கங்கள் கடுமையாக தாக்கின. 2-வது நிலநடுக்கம் நிலப்பரப்பின் மேற்பகுதிக்கு அருகே (10 கி.மீ. ஆழம்) ஏற்பட்டது பெரும் பாதிப்புக்கான காரணியாகி விட்டது. இதனால், தலைநகர் காரகாஸ் உள்பட பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கட்டிடங்கள் தரைமட்டமானதில், ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 900-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்தும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.