பாகிஸ்தானில் சீக்கிய சிறுமி துப்பாக்கி முனையில் கடத்தி, பலாத்காரம் செய்து திருமணம்

பாகிஸ்தானில் சீக்கிய சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தி, பலாத்காரத்திற்கு உட்படுத்தி திருமணம் செய்ததில் நீதி கேட்டு சீக்கியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் சீக்கிய சிறுமி துப்பாக்கி முனையில் கடத்தி, பலாத்காரம் செய்து திருமணம்
Published on

பியூனர்,

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பியூனர் மாவட்டத்தில், சிறுபான்மையினராக உள்ள சீக்கிய சமூக நபரான குருசரண் சிங் என்பவரின் மகளான தினா கவுர் என்பவரை, துப்பாக்கி முனையில் கடத்திய நபர், பாலியல் பலாத்காரம் செய்து பின்னர், உள்ளூர் நிர்வாகம் மற்றும் போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி தகவல் வைரலாக பரவியது.

சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இதுபோன்ற வேற்றுமை மற்றும் ஒடுக்குதல் ஆகியவற்றை கண்டித்து சீக்கியர்கள் நூற்றுக்கணக்கான பேர் நீதி கேட்டு சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர் ஒருவர் கூறும்போது, பாகிஸ்தான் மக்களுக்கும், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாங்கள் தொடர்ந்து நசுக்கப்படுகிறோம். தாக்கப்படுகிறோம்.

எங்களது மகளை திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடரும். உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் நேற்று சிறுமி கட்டாயப்படுத்தி, கடத்தப்பட்டு உள்ளார். பியூனர் மாவட்ட நிர்வாகிகள் இதில் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

அவர்கள், சிறுமியை சித்ரவதை செய்து, சமரசப்படுத்தி, மதமாற்றம் செய்துள்ளனர். பின்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். நாள் முழுவதும் எங்களை தவறாக வழிநடத்தி அலைக்கழித்தனர்.

எங்களது எப்.ஐ.ஆர். புகாரை கூட காவல் நிலையத்தில் பதிவு செய்யவில்லை. நாங்கள், பிற மூத்த அதிகாரிகளையும் சென்று பார்த்தோம். ஆனால், அவர்களும் எங்களுக்கு திருப்தியான பதிலளிக்கவில்லை. இந்த குற்ற சம்பவத்தில் அவர்கள் எல்லாரும் கூட்டு நபர்களாக உள்ளனர்.

உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன், எங்களுடைய குழந்தையை கட்டாயப்படுத்தி ஆவணங்களில் கையெழுத்திட வைத்துள்ளனர். உலகில் உள்ள சீக்கிய சமூகத்தினர் அனைவருக்கும் நான் வேண்டுகோள் வைக்கிறேன். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக எங்களுடன் இணைந்து போராட வாருங்கள். எங்களது குழந்தை எங்களிடம் ஒப்படைக்கப்படும் வரை நாங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என கூறியுள்ளார்.

இதேபோன்று, போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு சீக்கியர் கூறும்போது, எங்களுடைய அண்டை வீடுகளில் வசிக்கும் முஸ்லிம் மக்களுடன் நல்ல முறையிலான உறவிலேயே நாங்கள் உள்ளோம். இதுபோன்ற தாக்குதல்கள், சித்ரவதை செய்தல் மற்றும் கட்டாயப்படுத்தி எங்களுடைய குழந்தைகளை மதம் மாற்றுவது என்பது எங்களால் ஏற்க முடியாது.

முஸ்லிம் மற்றும் பாஸ்டுன் சகோதரர்களுக்கு நான் விடும் வேண்டுகோள், எங்களுக்காக குரலெழுப்பி, நீதி கிடைக்க எங்களுக்கு உதவுங்கள். எங்களுக்கு நீங்கள் துணை நிற்கவில்லை என்றால், நாங்கள் இனி இந்த பகுதியில் வசிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

இந்த மாகாணத்தில், சீக்கிய குடும்பத்தினர் பலர் தங்கி, நீண்டகாலம் வசித்து வருவதுடன் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மை சமூக மக்களான சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மகள்கள் தொடர்ச்சியாக கடத்தப்படுவதும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கடத்தல்காரர்களால் திருமணம் செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

இதனால், பாகிஸ்தானில் இருந்து பல குடும்பத்தினர் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று, தங்களது மகள்கள் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களை பாதுகாத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com