எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானியரை மணந்த சீக்கிய பெண் கைது


எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானியரை மணந்த சீக்கிய பெண் கைது
x

சரப்ஜீத் கவுர்- நசீர் ஹுசைன் தம்பதியினர் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

குருநானக்கின் பிறந்தநாள் விழா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக 2 ஆயிரம் சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றனர். அதில் 48 வயதான சரப்ஜீத் கவுர் என்ற பெண்ணும் சென்றிருந்தார்.

திருவிழா முடிந்து சீக்கியர்கள் அனைவரும் இந்தியா திரும்பிய நிலையில், சரப்ஜீத் கவுர் மட்டும் திரும்பி வரவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்டத்தை சேர்ந்த நசீர் ஹுசைன் என்ற நபரை சரப்ஜீத் கவுர் கடந்த நவம்பர் 4-ந்தேதி திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

சரப்ஜீத் கவுருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது. இந்நிலையில், நசீர் ஹுசைனை திருமணம் செய்வதற்காகவே அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார். திருமணத்திற்கு முன்பு அவரது பெயர் நூர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் பாகிஸ்தான் குடியுரிமையை பெற விண்ணப்பித்துள்ளதாகவும், தனது விசாவை நீட்டிக்கும்படி இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சரப்ஜீத் கவுர்- நசீர் ஹுசைன் தம்பதியினர் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் அதிகாரிகள் தங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த தம்பதியினரை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சரப்ஜீத் கவுர் மற்றும் நசீர் ஹுசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சரப்ஜீத் கவுரை அரசாங்கத்தால் நடத்தப்படும் காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story