மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம்; வெறிச்சோடிய வீதிகள்

மியான்மரில் ஆளும் ராணுவ அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராடும் வகையில் அந்நாட்டு மக்கள் பணிகளை புறக்கணித்து தங்கள் வீடுகளிலேயே இருந்தனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம்; வெறிச்சோடிய வீதிகள்
Published on

நேபிடாவ்,

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில், கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், ஆங் சான் சூகீயின் ஆளுங்கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அந்நாட்டு ராணுவம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து 76 வயதான ஆங் சான் சூகீ வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் 2 வருடங்களாக குறைக்கப்பட்டது. இருப்பினும் அவர் மீது இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மக்கள் நடத்துகின்ற போராட்டங்களை அந்நாட்டு ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் இதுவரை சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறு அன்று போராட்டக்காரர்கள் மீது ராணுவ வாகனம் மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.

இந்த நிலையில் ஆளும் ராணுவ அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராடும் வகையில் அந்நாட்டு மக்கள் பணிகளுக்கு செல்லாமல் புறக்கணித்து தங்கள் வீடுகளிலேயே இருந்தனர். நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடை உரிமையாளர்களை பணிக்கு திரும்புமாறு ராணுவம் உத்தரவிட்டதாக செய்தி வெளியான நிலையிலும், இந்த அமைதி போராட்டம் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com