அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் பங்கு: எலான் மஸ்க் அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ஆந்த்ரோபிக்' தனது பங்குகளில் 5 சதவீதத்தை பொது நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது.
அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் பங்கு:  எலான் மஸ்க் அறிவிப்பு
எலான் மஸ்க்
Published on: 

வாஷிங்டன்,

உலகளாவிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் தலைவருமான எலான் மஸ்க், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு ஸ்பேஸ்எக்ஸ் பங்கினை வழங்க உள்ளதாக அறிவித்து ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளார்.

உலகின் நம்பர் 1 பணக்காரர்

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், தனக்குச் சொந்தமான 'எக்ஸ்' (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "அடுத்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் எனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கினை வழங்க உள்ளேன். இதுபோன்று செய்யப்போகும் பல திட்டங்களில் இது முதலாவது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன?

சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ஆந்த்ரோபிக்' தனது பங்குகளில் 5 சதவீதத்தை பொது நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பங்குகளை நிதிக்கு கொடுப்பதற்கு பதிலாக நேரடியாக பொதுமக்களுக்கே கொடுக்கலாம் என மஸ்க் பரிந்துரைத்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

பொது பங்கு வெளியீடு

கடந்த ஜூன் மாதம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது பொது பங்கு வெளியீட்டை (IPO) பிரம்மாண்டமாக நடத்தி முடித்த சில மாதங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் ரூ. 99,700 கோடி செலவு

தற்போதைய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 7.2 கோடி குழந்தைகள் உள்ளனர். தற்போது பங்கு சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 146 டாலராக வர்த்தகமாகிறது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், அமெரிக்க குழந்தைகளுக்கு பங்குகளை இலவசமாக வழங்க எலான் மஸ்க்கிற்கு சுமார் 10.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 99,707 கோடி) செலவாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

விநியோகம் எப்படி?

எலான் மஸ்க் இந்த பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்ட போதிலும், இந்தப் பங்குகள் எவ்வாறு விநியோகிக்கப்படும், அதற்கான தகுதி வரம்புகள் என்ன என்பது குறித்த எந்தவொரு விரிவான விவரங்களையும் அவர் வெளியிடவில்லை.

அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் உலகின் நம்பர் 1 பணக்கராரராக இருந்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கினை இலவசமாக வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com