

மாட்ரிட்,
இஸ்ரேல் நாட்டில் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் என்ற உளவு மென்பொருள், மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்கள் உளவுபார்க்கபட்டதாக கூறப்படுகிறது.
அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், ராணுவ தளபதிகள் என பல்வேறு நபர்களின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரியின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் பெட்ரொ சென்சீசின் செல்போன் கடந்த ஆண்டு மே மாதமும், பாதுகாப்புத்துறை மந்திரியின் செல்போன் கடந்த ஆண்டு ஜூன் மாதமும் பெகாசஸ் தாக்குதலுக்கு உள்ளானதாக ஸ்பெயின் அரசு இன்று தெரிவித்துள்ளது.
இந்த மென்பொருள் தாக்குதலின்போது பிரதமரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை செல்போனில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதா? இதன் பின்னணியில் வேறு நாடு ஏதேனும் உள்ளதா? என்ற தகவலை ஸ்பெயின் அரசு வெளியிடவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்த ஸ்பெயின் அரசு உத்தரவிட்டுள்ளது.