

கொழும்பு,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆசியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியுள்ளது. மேலும், இந்த வழியாக கப்பல் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கம் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் எதிரொலிக்கத்தொடங்கியுள்ளது.
அந்த வகையில் இலங்கையில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 24 உயர்த்தப்பட்டு ரூ. 317க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தப்பட்டு ரூ. 365க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் லிட்டருக்கு 22 உயர்த்தப்பட்டு ரூ. 303க்கு விற்பனை செய்யப்படுகிறது. யூரோ 4 ரக டீசல் லிட்டருக்கு ரூ. 24 உயர்த்தபட்டு ரூ. 353க்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணென்னை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டு 195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.