

கொழும்பு,
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில், இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து பின்னர் 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியில் சஜித் பிரேமதாசாவும், சிங்களர்கள் பகுதியில் கோத்தபய ராஜபக்சேவும் முன்னிலை பெற்றனர். இதனால் வெற்றி வேட்பாளர் யார் என்பதில் இழுபறி காணப்பட்டது.
இந்த நிலையில், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் கோத்தபய ராஜபக்சே 41 லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளை (50 சதவீதத்திற்கு மேல்) பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசா 34 லட்சத்திற்கு கூடுதலான வாக்குகளை பெற்று (43 சதவீதம்) உள்ளார்.
வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ளார். இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாசா ஒப்பு கொண்டார்.
அவர், இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். இதனால் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக இன்று மாலைக்குள் முறைப்படி அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.