சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள் 40 பேர் கொன்று குவிப்பு

சிரியாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்கள், அந்த நாட்டை உலுக்கி உள்ளன. ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 40 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள் 40 பேர் கொன்று குவிப்பு
Published on

பெய்ரூட்,

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந் தேதி, அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. 7 ஆண்டுகள் முடிந்து 8வது ஆண்டாக அந்த உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது.

இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் கால் பதித்து பரவலாக பல இடங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

அங்கு உள்ள ஸ்வேய்டா மாகாணத்தின் பெரும்பகுதி அதிபர் பஷார் அல் ஆசாத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் அந்த மாகாணத்தின் வடக்கு, கிழக்குபகுதியில் அமைந்து உள்ள பாலைவன பகுதிகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அங்கு அவர்களை முற்றிலும் வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளும், அந்தப் படைகளுக்கு ஆதரவாக களத்தில் உள்ள ரஷிய படைகளும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இருந்த போதிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். இது பஷார் அல் ஆசாத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்து உள்ளது.

இந்த நிலையில் அங்கு ஸ்வேய்டா நகரத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 3 பேர் இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பெல்ட் அணிந்து கொண்டு, தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அந்த நகரத்தின் அல் சவுக் பகுதியில் 3 பேரில் ஒருவர், தனது இடுப்பில் அணிந்து இருந்த பெல்ட்டில் பொருத்தப்பட்டு இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தார். குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பிற 2 பயங்கரவாதிகளும் தங்கள் இடுப்பில் அணிந்து இருந்த பெல்ட்டில் பொருத்தப்பட்டு இருந்த வெடிகுண்டுகளை வெடிப்பதற்குள், அவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்று விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் முதல் பயங்கரவாதி தன் இடுப்பில் அணிந்து இருந்த பெல்ட்டில் உள்ள குண்டுகளை வெடிக்க வைத்ததில் அரசு ஆதரவு படையினர் 26 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதேபோன்ற அந்த நகரின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தினர். அவற்றில் 14 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த நகரில் நடந்த அனைத்து தாக்குதல்களிலும் சேர்த்து மொத்தம் 40 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏராளமானோர் படுகாயமும் அடைந்து உள்ளனர். அவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்களில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஸ்வேய்டா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் பதுங்கி உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை இலக்காக வைத்து சிரியா ராணுவம் தாக்குதல்களை தொடங்கி உள்ளன.

மேலும், யாருக்கு உரியவை என அடையாளம் காண முடியாத போர் விமானங்களும், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தெல் ரகுமான் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com