

உலக அளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளி நபர்களின் பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதலிடம் பிடித்துள்ளார். உலகளாவிய இந்தியர்கள் பட்டியல் 2026-ல் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 236 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தலைமை வகிக்கும் 200 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
1. சுந்தர் பிச்சை – ஆல்பபெட் (கூகுள்) – 4.2 டிரில்லியன் டாலர்.
2. சத்யா நாதெல்லா – மைக்ரோசாப்ட் – 2.6 டிரில்லியன் டாலர்.
3. சஞ்சய் மெஹ்ரோத்ரா – மைக்ரான் டெக்னாலஜி – 1.4 டிரில்லியன் டாலர்.
கடந்த 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆல்பபெட் நிறுவனத்தின் மதிப்பு 98 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு 17 சதவீதம் குறைந்துள்ளது.
இந்திய வம்சாவளி அதிகாரிகள் வழிநடத்தும் நிறுவனங்களின் மொத்த மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 53 சதவீதம் உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் உலகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன. மேலும், 2025-ம் ஆண்டில் இந்நிறுவனங்களின் மொத்த வருவாய் 2.5 டிரில்லியன் டாலர்களாகவும், நிகர லாபம் 416 பில்லியன் டாலர்களாகவும் இருந்துள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 200 நிறுவனங்களில் 103 நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டோ அல்லது அதனுடன் ஒருங்கிணைந்தோ செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 10.7 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இதன் மூலம் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.