

மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விமான டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
அதன்படி கடந்த 17-ந் தேதி தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட இந்திய மாணவ- மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் மணிலா விமான நிலையத்துக்கு வந்தனர்.
ஆனால், அங்கிருந்து அவர்கள் இந்தியா வர அனுமதி மறுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு வரை விமான நிலையத்திலேயே மாணவ -மாணவிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமலும், மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடியாமலும் அவர்கள் பரிதவித்து வந்தனர்.
இதுகுறித்து அங்கு தவித்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, வட்டம், புதுக்காடுவெட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருடைய மகன் காட்வின் லியோ என்பவர் கொடுத்த தகவலின்பேரில் நேற்றைய தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு பிலிப்பைன்ஸ் நாட்டின் இந்திய தூதரக அதிகாரிகள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் மாணவ-மாணவிகளை 20 பேர் கொண்ட குழுவாக பிரித்து, மணிலா விமான நிலையம் அருகே உள்ள சீக்கியர் குருத்வாராவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சீக்கிய மக்கள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இரவு உணவு வழங்கி, தங்கும் இடமும் அளித்தனர்.
நேற்று காலை, தூதரக அதிகாரிகள், மாணவ-மாணவிகள் படித்து வரும் கல்லூரி நிர்வாகத்தினருடன் பேசி, அவர்கள் தங்கி இருந்த கல்லூரி விடுதிகளுக்கே அனுப்ப முடிவு செய்தனர்.
மேலும், வருகிற 31-ந் தேதி வரை இந்தியாவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானங்கள் செல்ல தடை இருப்பதால், அதுவரை மாணவ-மாணவிகள் காத்திருக்கும்படி தூதரக அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.
அதன்பேரில் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக அவரவர் படிக்கும் கல்லூரி விடுதிகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் அவர்கள் விடுதிகளுக்கு திரும்பினார்கள்.