

மாட்ரிட்,
ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளை 'தெரிஸ்' என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கி வருகிறது. இதனால் அங்குள்ள டெனெரிப் மற்றும் லா பால்மா தீவு களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தெரிஸ் புயல் இப்பகுதி முழுவதும் வீசுவதால், ஸ்பெயின் நாட்டின் வானிலை ஆய்வு மையம் (AEMET), கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் உயரமான பகுதிகளில் அரிதாக ஏற்படக்கூடிய பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. டெனெரிப் மற்றும் பிற தீவுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், மாறிவரும் வானிலை நிலவரங்கள் மற்றும் தங்களது பயணத் திட்டங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு தெரிஸ் புயல் காரணமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது. கனமழையுடன் சில இடங்களில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. கடலில் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்புவதால் கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பலத்த காற்றால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அங்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.