மலேசிய அரசியலில் பரபரப்பு: மன்னருடன் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் சந்திப்பு - ஆட்சி மாற்றம் நிகழுமா?

மலேசிய மன்னருடன் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் சந்தித்ததால், ஆட்சி மாற்றம் நிகழுமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மலேசிய அரசியலில் பரபரப்பு: மன்னருடன் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் சந்திப்பு - ஆட்சி மாற்றம் நிகழுமா?
Published on

கோலாலம்பூர்,

மலேசியாவில் மலேசிய ஐக்கிய சுதேச கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் முஹைதீன் யாசின் பிரதமராக உள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் முஹைதீன் யாசின் ஆட்சி கவிழ்ந்து விட்டதாகவும் புதிய அரசை அமைப்பதற்கு தமக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாகவும் மக்கள் நீதிக்கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார். மேலும் ஆட்சி அமைப்பது தொடர்பாக மன்னரை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் மன்னர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இந்த சந்திப்பு தாமதமானது.

இந்த நிலையில் அன்வர் இப்ராஹிம் நேற்று மன்னரை நேரில் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. மன்னருடனான சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்வர் இப்ராஹிம், பிரதமர் முஹைதீன் யாசினை பதவி நீக்கம் செய்ய 120-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து தான் பெற்ற ஆதரவின் ஆதாரங்களை மன்னரிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்பை கடைப்பிடித்து நல்ல முடிவை எடுக்க மன்னர் உறுதி அளித்ததாக குறிப்பிட்ட அன்வர் இப்ராஹிம் தான் வழங்கிய ஆதாரங்களை மன்னர் மறுஆய்வு செய்து நல்ல முடிவை எடுக்கும் வரை மலேசிய மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் மன்னரிடம் ஆதாரங்களை வழங்கியதாக அன்வர் இப்ராஹிம் கூறுவதை அரண்மனை வட்டாரங்கள் மறுத்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com