

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி. அங்குள்ள கிளிப்டன் பகுதி உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும். அங்கு சீனா உள்பட பல்வேறு நாடுகளின் துணை தூதரகங்கள், உயர் தர உணவகங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளன. பாகிஸ்தான் மக்கள் கட்சித்தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பங்களாவும் அந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு, தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் சீன தூதரகத்துக்கு சற்று தொலைவில் ஒரு காரில் வந்து இறங்கினர்.
அங்கு அவர்கள் காரை நிறுத்தி விட்டு, மின்னல் வேகத்தில் நடந்து வந்து சீன தூதரகத்தின் சோதனைச்சாவடியை தாக்கினர். கையெறி குண்டுகளை வீசினர். இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமானது.
அதைத் தொடர்ந்து சீன துணை தூதரக பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசாரையும், விசாவுக்கு விண்ணப்பிக்க வந்த 2 பேரையும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தின்போது சீன தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டனர். அனைத்து வாயில்களையும் அவர்கள் மூடி விட்டனர். ஆனாலும், போலீசாரை சுட்டுக்கொன்ற பின்னர் பயங்கரவாதிகள், சீன தூதரகத்துக்குள் நுழைவதற்கு முன்னேறினர். ஆனால் அவர்களால் தொடர்ந்து முன்னேற முடியாதபடிக்கு அங்கே துணை ராணுவ படையினர் விரைந்தனர். அவர்களைப் பார்த்ததும் அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
உடனே துணை ராணுவத்தினரும் தங்கள் துப்பாக்கிகளால் திருப்பித்தாக்கினர். இரு தரப்பிலும் சிறிது நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த சண்டையின் இறுதியில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதை கராச்சி நகர போலீஸ் தலைவர் அமீர் ஷேக் உறுதிபடுத்தினார். பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது, சீன துணை தூதரகத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அவர் கூறினார்.
இந்த சண்டையின்போது சீன தூதரக காவலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், வெடிபொருட்கள், உணவுப்பொருட்கள், மருந்துகள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதிகள் அந்தப் பகுதியை முற்றுகையிட்டிருந்தபோது, சீன துணை தூதரகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பிரதான கட்டிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேபோன்று அந்தப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடங்கள், உயர்தர உணவகங்கள் உடனடியாக மூடப்பட்டு விட்டன.
இதற்கு மத்தியில் சீன துணைத்தூதருடன் சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் அலி ஷா தொடர்பு கொண்டு பேசினார். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடும் என உறுதி அளித்தார். இந்த தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிற நிலையில் இந்த சம்பவம், இரு நாட்டு அரசுகளுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இடையே பல்வேறு பயங்கரவாத அமைப்பினரின் ஆதிக்கம் மிகுந்த கைபர் பக்துங்வா மாகாணத்தில், ஆரக்ஜாய் மாவட்டத்தில், ஹாங்கு நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த வெள்ளிக்கிழமை சந்தைப் பகுதியில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு, மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியே குலுங்கியது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 சீக்கியர்கள் உள்பட 31 பேர் உடல் சிதறி உயிரிழந்து விட்டதாகவும், 40 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.