'பொதுமக்கள் ஆதரவுக்கு நன்றி' - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் தற்போது பொதுப்பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார்.
'பொதுமக்கள் ஆதரவுக்கு நன்றி' - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை
Published on

லண்டன்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். தற்போது 75 வயதாகும் சார்லஸ், கடந்த மாதம் ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்தது. மன்னருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைந்து மக்கள் சார்ந்த பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியணை ஏறிய 18 மாதங்களுக்குள் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுப்பணிகளில் இருந்து அவர் தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார். இதனிடையே மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டி இங்கிலாந்து மக்களும், சர்வதேச நாடுகளின் தலைவர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிப்பதாக இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாக எனக்கு கிடைத்து வரும் ஆதரவு மற்றும் வாழ்த்துச் செய்திகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற அன்பான செய்திகள் மிகப்பெரிய ஆறுதலையும், ஊக்கத்தையும் தரும் என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும். எனது புற்றுநோய் சிகிச்சை பற்றிய செய்திகளின் மூலமாக பிரிட்டன் மற்றும் பிற இடங்களில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com