பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையில் கூட்டணி அரசு விரைவில் பதவியேற்பு

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையில் கூட்டணி அரசு விரைவில் பதவியேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையில் கூட்டணி அரசு விரைவில் பதவியேற்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 25ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமரும், ஊழல் வழக்கில் சிறையில் இருப்பவருமான நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்இஇன்சாப் (பி.டி.ஐ.) மற்றும் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் போட்டியிட்டன.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் இரவிலேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையே காணப்படுகிறது. எனினும் இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அங்கு நேரடி தேர்தல் நடத்தப்பட்ட 272 தொகுதிகளில் 137 தொகுதியை பெறும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், பி.டி.ஐ. கட்சிக்கு 115 இடங்களும், முஸ்லிம் லீக் கட்சிக்கு 62 இடங்களும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 43 இடங்களும் கிடைத்திருப்பதாக தலைமை தேர்தல் கமிஷன் நேற்று கடைசியாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

தேர்தல் முடிவுகளின் இறுதி நிலவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. முடிவுகள் அறிவிப்பதில் புதிய நடைமுறையை இந்த ஆண்டு பின்பற்றியதாலும், முடிவு வெளியிடும் சாப்ட்வேரில் பழுது ஏற்பட்டதாலும் இந்த தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி இம்ரான்கானின் கட்சி பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் விரைவில் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

4 மாகாண சட்ட சபைகளுக்கு நடந்த தேர்தலில், பஞ்சாப் மாகாணத்திலும் இம்ரான்கானின் கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சி வந்த நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து சரிந்து வரும் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பை அதிகரிப்பது, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் சுமுக உறவை பேணுவது உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையே பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்து உள்ளது. தங்களுக்கு பல வாய்ப்புகள் இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர முடிவு செய்திருப்பதாகவும் நவாஸ் ஷெரீப்பின் மருமகனும், எம்.பி.யுமான ஹம்சா ஷாபாஸ் ஷெரீப் கூறினார்.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவில் முறைகேடு நடந்ததாகவும், இந்த முடிவுகளை ஏற்கமாட்டோம் எனவும் அந்த கட்சி அறிவித்து இருந்தது. மேலும் இது தொடர்பாக பிற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com