வெனிசூலாவில் சிறையில் மோதல்; 29 கைதிகள் பலி

வெனிசூலாவில் சிறையில் ஏற்பட்ட மோதலில் 29 கைதிகள் பலியானார்கள்.
வெனிசூலாவில் சிறையில் மோதல்; 29 கைதிகள் பலி
Published on

கராக்கஸ்,

வெனிசூலாவின் மேற்கு பகுதியில் உள்ள போர்ச்சுகியூசா மாகாணம் அகாரிகுவா நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. 250 கைதிகளை மட்டுமே தாங்கும் இந்த சிறையில் தற்போது, 540 கைதிகள் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்குள்ள கைதிகளில் ஒரு தரப்பினர் சிறையை உடைத்துக்கொண்டு தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சிறை காவலர்களின் கவனத்தை திசைதிருப்ப, சக கைதிகளை பார்க்க வந்திருந்த அவர்களின் உறவினர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர். இதையடுத்து, சிறப்பு போலீஸ் படையினர் வரைவழைக்கப்பட்டு தப்ப முயன்ற கைதிகள் சுற்றிவளைக்கப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கைதிகள் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளால் போலீஸ் படையினரை தாக்கினர்.

அதனை தொடர்ந்து கைதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் சிறைக்குள் பெரும் வன்முறை வெடித்தது. இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் சண்டை நீடித்தது. இதில் 29 கைதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதே சமயம் கைதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com