தாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி.
தாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை
Published on

பாங்காக்,

வைராபான் சுக்பான் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

அவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com