ஹாங்காங் போராட்டம்: வன்முறை களமான பல்கலைக்கழகம்

ஹாங்காங் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பல்கலைக்கழகம் வன்முறை களமாக மாறியது.
ஹாங்காங் போராட்டம்: வன்முறை களமான பல்கலைக்கழகம்
Published on

ஹாங்காங்,

ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பகுதியில் உள்ள பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து, அதை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் போலீசார் உள்ளே நுழையாமல் இருக்க அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும், அம்புகளை ஏவியும் தாக்கினர். போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் போராட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே வர மறுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிரடியாக பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்தனர். 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை தவிர போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்வோம் என போலீசார் கூறினர்.

இதனால் பயந்துபோன போராட்டக்காரர்களில் பலர் பல்கலைக்கழகத்தில் இருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் சுமார் 100 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டுள்ள போலீசார் உள்ளே இருக்கும் போராட்டக்காரர்களை கைது செய்ய தொடர்ந்து தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனால் போலீசார் பல்கலைக்கழகத்துக்குள் நுழையாமல் இருக்க முக்கிய நுழைவாயில்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

அதே சமயம் போராட்டக்காரர்களில் பலர் பல்கலைக்கழகத்தின் பின்புறம் வழியாக கயிறு கட்டி இறங்கியும், கழிவு நீர் சுரங்கப்பாதை வழியாகவும் தப்பி சென்றனர். எனினும் பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் சுமார் 200 போராட்டக்காரர்கள் தொடர்ந்து போலீசாருடன் மோதி வருகின்றனர். இதனால் பல்கலைக்கழகம் வன்முறை களமாக மாறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com