வெளிநாடுகளில் இருந்த ஹுபெய் மாகாண மக்கள் தாயகம் திரும்பினர்

வெளிநாடுகளில் இருந்த ஹுபெய் மாகாண மக்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்.
வெளிநாடுகளில் இருந்த ஹுபெய் மாகாண மக்கள் தாயகம் திரும்பினர்
Published on

பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே வெளிநாடுகளில் இருந்த சீனாவின் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்த மக்களைச் சீனாவுக்கு அழைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு இருந்தது. இதன்படி தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹுபெய் மாகாண மக்களைச் சீனாவுக்கு அழைத்துவரும் வகையில், ஜனவரி 31ம் தேதி சீன வெளியுறவு அமைச்சகம், தொடர்புடைய வாரியங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகங்களுடன் இணைந்து, மூன்று சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தது.

முன்னதாக கொரோனா வைரஸின் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி 23 ம் தேதி ஹுபெய் மாகாணம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. அதற்கு முன்னர், கொரோனா வைரஸின் மையப்பகுதியான தலைநகர் உகான் பகுதிகளைச் சேர்ந்த 5 மில்லியன் மக்கள் அங்கிருந்து வெளியேறியதாக சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த பகுதி மக்கள் சீனப் புத்தாண்டு மற்றும் வார விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மொத்தம் 310 ஹுபெய் மாகாண மக்கள் இந்த சிறப்பு விமானங்களின் மூலம் சீனாவுக்குத் திரும்பி வருகின்றனர். 31ம் தேதி நள்ளிரவு முதல் தொகுதியான 199 பேர் வூஹான் தியன்ஹே சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com