தலீபான்கள் கையில் சிக்கிய அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவிகள்!

பயோமெட்ரிக் கருவிகளின் தரவுகள் மூலம் தங்களுக்கு எதிராக செயல்பட்ட ஆப்கான் மக்களை தலீபான்கள் அடையாளம் காண கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காபூல்,

தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கிய நிலையில், ஏற்கனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறியது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து வெளியேறியதால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஏராளமான ராணுவ தளவாடங்களை அங்கேயே விட்டு விட்டுச் சென்றன. அவை அனைத்தும் தற்போது தலீபான்கள் வசம் சென்றுள்ளது. இந்த ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பயோமெட்ரிக் கருவிகள் சிலவும் தலீபான்களின் கையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளூரில் அமெரிக்க ராணுவத்தோடு பணிபுரிபவர்களை அடையாளம் காண, அந்த கருவிகள் பயன்படுத்தபட்டு வந்தன.

அந்த வகையில் அந்த பயோமெட்ரிக் கருவிகளில் ஆப்கானிஸ்தான் மக்கள் பலரின் கை ரேகை, கண்விழி ரேகை மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தரவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் தற்போது தலீபான்கள் வசம் சென்றிருப்பதால் அதில் உள்ள தரவுகள் மூலம் தங்களுக்கு எதிராக செயல்பட்ட ஆப்கான் மக்களை அவர்கள் அடையாளம் காண கூடும் என அஞ்சப்படுகிறது.

அப்படி அவர்கள் தங்களை அடையாளம் கண்டால் தங்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என அமெரிக்க படைகளுக்கு ஆதரவு அளித்து வந்த ஆப்கான் மக்கள் பலரும் பயத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com