லண்டன் கோர்ட்டில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை தொடங்கியது

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் நேற்றுதொடங்கியது.
லண்டன் கோர்ட்டில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை தொடங்கியது
Published on

லண்டன்,

ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனராவார். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். குறிப்பாக, ஈராக் நாட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய கோரத் தாண்டவம், அரசியல் கைதிகளை அடைக்கும் குவாண்டனமோ சிறைச்சாலை உள்ளிட்ட தகவல்கள் உலகையே அதிர வைத்தன.

இது ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் உளவாளி என்றும் அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதற்கிடையில் ஜூலியன் அசாஞ்சே வாழ்ந்து வந்த சுவீடன் நாட்டில் அவருக்கு எதிராக பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா சுவீடனை வலியுறுத்தியது.

இப்படி தொடர்ந்து நெருக்கடி முற்றிய காரணத்தால் ஜூலியன் அசாஞ்சே சுவீடனில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார். அங்கு அவர் லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்தார். ஆனாலும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஈகுவடார் அரசு அவரை கைவிட்டது.

அதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஈகுவடார் தூதரகத்துக்குள்ளே நுழைந்த லண்டன் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

அதன் பிறகு, தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார் ஜூலியன் அசாஞ்சே. இதையடுத்து கைதான ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது. உளவு குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என்று கூறி லண்டன் கோர்ட்டில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில் பல மாதங்களுக்கு பிறகு நேற்று விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கு விசாரணைதான் ஜூலியன் அசாஞ்சேவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் ஒருவேளை ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு லண்டன் கோர்ட்டும் ஒப்புதல் வழங்கினாலும், அது குறித்த இறுதி முடிவை இங்கிலாந்து அரசு எடுக்கும்.

இதனிடையே நேற்று வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த ஜூலியன் அசாஞ்சே மனைவி ஸ்டெல்லா மோரிஸ் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பான இந்த வழக்கில் அசாஞ்சே தப்பிப்பார் என தான் நினைக்கவில்லை என்றும், இது ஒரு பேரழிவாக அமையும் என்றும் கவலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com