பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவதில் சிக்கல்

வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து லாகூர் ஐகோர்ட்டின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் இம்ரான் கான் தாக்கல் செய்த வழக்கிலும் நிவாரணம் கிடைக்கவில்லை.
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவதில் சிக்கல்
Published on

லாகூர்:

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இம்ரான் கான் தாக்கல் செய்த மனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இம்ரான்கான் தன்னுடைய பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை கவனத்தில் கொண்டு தேர்தல் ஆணையம், வேட்பு மனுக்களை நிராகரித்தது. இதேபோல் அவரது ஆதரவாளர்கள் பலரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து லாகூர் ஐகோர்ட்டின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் இம்ரான் கான் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தனர். இதனால் இம்ரான் கான் போட்டியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு சின்னம் ஒதுக்கீடு செய்ய இன்னும் 3 தினங்களே உள்ளன. அதற்குள் இம்ரான் கான் மேல்முறையீடு செய்து போட்டியிட அனுமதி பெற முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை. எனவே, அவர் பிப்ரவரி 8ல் நடைபெறும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிடிஐ கட்சியின் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு தந்திரத்தையும் அரசு பயன்படுத்துவதாக அக்கட்சி தலைமை குற்றம்சாட்டியுள்ளது. பிடிஐ வேட்பாளர் அப்துல்லா மும்தாஜ் காலூன், வெளிநாட்டில் இருந்து வந்ததும் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இருந்து அவரை விசாரணை முகமை அதிகாரிகள் கடத்தி சென்றுவிட்டதாகவும் கூறி உள்ளது.

ஊழல், வன்முறை உள்ளிட்ட பல்வேறு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் இம்ரான் கான், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com