ரஷியாவில் பாலம் இடிந்ததால் தடம்புரண்ட ரெயில்கள்; 7 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் உக்ரைனின் சதி இருக்கிறதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷியாவில் பாலம் இடிந்ததால் தடம்புரண்ட ரெயில்கள்; 7 பேர் உயிரிழப்பு
Published on

மாஸ்கோ,

ரஷியாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிளிமோவ் நகரில் இருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது. தலைநகர் மாஸ்கோ நோக்கிச் சென்ற அந்த ரெயில் பிரையன்ஸ்க் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் இடிந்த கான்கிரீட் சுவர்கள் தண்டவாளத்தின் மீது பரவி கிடந்தன.

இதனை எதிர்பாராமல் சென்ற ரெயில் இடிபாடுகள் மீது மோதி தடம் புரண்டது. தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று மீட்பு பணியை முடுக்கிவிட்டனர். எனினும் இந்த சம்பவத்தில் ரெயில் டிரைவர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அதேபோல் உக்ரைன் எல்லையில் உள்ள குர்ஸ்க் பிராந்தியம் அருகே ஒரு சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பாலமும் திடீரென இடிந்து சரக்கு ரெயில் மீது விழுந்தது. இதில் அந்த ரெயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றது. இந்த விபத்தில் ரெயில் டிரைவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்கு விரைந்த மீட்பு படையினர் தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தினர்.

இந்த இரு விபத்துகள் நிகழ்ந்த பகுதியும் உக்ரைன் எல்லை அருகே நடந்துள்ளது. இரு நாடுகளின் போருக்கு மத்தியில் இந்த விபத்து நடைபெற்றதால் இது உக்ரைனின் சதியா? என்ற கோணத்தில் குற்றவியல் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ராணுவ பயிற்சி முகாம் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 12 ராணுவ வீரர்கள் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com