2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்: சம்மதித்த ஈரான்.. திறக்கப்படும் ஹார்முஸ் நீரிணை - என்ன நடந்தது..?

வரும் வெள்ளியன்று இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளுக்கும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்: சம்மதித்த ஈரான்.. திறக்கப்படும் ஹார்முஸ் நீரிணை - என்ன நடந்தது..?
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், "இன்றிரவு முழு நாகரீகம் (ஈரான்) ஒன்று அழிய போகிறது. அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியோடு நிறைவடைய இருந்தது.

இந்த சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார். இந்த சூழலில், டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். இது ஒரு இருதரப்பு போர்நிறுத்தமாக இருக்கும்.

இவ்வாறு செய்வதற்கான காரணம் என்னவென்றால், ஈரானில் நாம் ஏற்கனவே அனைத்து ராணுவ இலக்குகளையும் அடைந்துவிட்டோம். மேலும், ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம். ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றோம். அது பேச்சுவார்த்தைக்கு உகந்த அடித்தளமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்களும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து நிறைவு செய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவைப்படும்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், டிரம்ப் இதை ஒரு “இருதரப்பு போர் நிறுத்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் செய்யப்படும் இந்த இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்துள்ளது. இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்காக வருகிற ஏப்ரல் 10ம் தேதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் வலைதளத்தில், “மிகுந்த பணிவுடன் நான் அறிவிப்பது என்னவென்றால், ஈரான் இஸ்லாமியக் குடியரசும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும், அவற்றின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த விவேகமான நடவடிக்கையை நான் மனதார வரவேற்பதோடு, இரு நாடுகளின் தலைமைகளுக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து ஒரு உறுதியான உடன்படிக்கையை எட்டுவதற்காக, அவர்களின் தூதுக்குழுக்களை நாளை மறுநாள் (ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை) இஸ்லாமாபாத்திற்கு வருமாறு அழைக்கிறேன். இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க ஞானத்தையும் புரிதலையும் வெளிப்படுத்தி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர்.

'இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்' நீடித்த அமைதியை அடைவதில் வெற்றிபெறும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம், மேலும் வரும் நாட்களில் இன்னும் பல நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com