பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு இணைந்து பணியாற்றுவோம் என்று அறிவிப்பு

பிலிப்பைன்சில் நடந்த ஆசியான் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசினர். அப்போது மோடியை பாராட்டிய டிரம்ப், இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறினார்.
பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு இணைந்து பணியாற்றுவோம் என்று அறிவிப்பு
Published on

மணிலா,

தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட 10 நாடுகளை கொண்ட ஆசியான் அமைப்பின் 31வது உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஆசியான் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக பிராந்திய பாதுகாப்பு சூழல் குறித்தும், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, சர்வதேச சமூகமும், அமெரிக்க தலைமையும் இந்தியாவிடம் இருந்து எதை எதிர்பார்க்கின்றனவோ, அதன் அடிப்படையில் செயல்பட இந்தியா முயன்று வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று டிரம்புக்கு உறுதி அளித்தார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு, இருதரப்பு நலன்களுக்கு அப்பால் வளர்ந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இருதரப்பு நலன்கள், ஆசியாவின் எதிர்காலம் மற்றும் ஒட்டுமொத்த உலக மனித இனத்துக்காக இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய டிரம்ப், மோடியை தனது நண்பர் என்றும், மிகச்சிறந்த மனிதர் என்றும் கூறி மகிழ்ந்தார். அவர் கூறுகையில், பிரதமர் மோடி இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை இதற்கு முன் வெள்ளை மாளிகையில் சந்தித்தேன். எங்களுக்கு ஒரு நண்பராக அவர் மாறிவிட்டார். அவர் ஒரு மிகப்பெரும் பணியை செய்து வருகிறார். ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதுடன், நாங்கள் இணைந்து தொடர்ந்தும் பணி செய்வோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com