

வாஷிங்டன்,
ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துப் பொருட்கள் மீதும் உடனடியாக 50 சதவீதம் வரி விதிக்கப்படும். எந்தவொரு வரிவிலக்கோ அல்லது சலுகையோ கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் எச்சரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
இதற்கு எந்த விலக்கும் அளிக்கப்படமாட்டாது என்றும், ஈரானின் பாதுகாப்பு விநியோகச் சங்கிலியைத் துண்டிப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 14 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் டிரம்ப் தனது வரி விதிப்பு கொள்கையை மீண்டும் தொடங்கியுள்ளதை இந்த பதிவு காட்டுகிறது. ஆனால் டிரம்ப் எந்த நாடு ஈரானுக்கு ஆயுதம் சப்ளை செய்கிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மேலும் எந்த நாட்டின் மீது வரி விதிக்கப்படுகிறது என்பதையும் அவர் அறிவிக்கவில்லை.
ஈரானுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தொழில்நுட்பங்களை வழங்கும் முக்கிய நாடுகளில் ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகள் முக்கிய இடம் வகிக்கிறது என அட்லான்டிக் கவுன்சில் தரவுகள் தெரிவிக்கிறது. ரஷ்யா நவீன ஆயுதங்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது. அதில் குறிப்பாக விமானங்கள், ஏவுகணைகள், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் போன்ற உயர்நிலை ராணுவ உபகரணங்களை வழங்கும் நாடாக உள்ளது.
சீனா நேரடியாக பெரிய அளவில் ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக, இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உதிரிபாகங்களை வழங்குகிறது. அதாவது டிரோன் உற்பத்தி, ஏவுகணை எரிபொருள் மற்றும் பிற ராணுவ பயன்பாட்டிற்கு மாற்றக்கூடிய தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. வட கொரியா குறிப்பாக, ஏவுகணை தொழில்நுட்பம், அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை வழங்கும் நாடாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த 3 நாடுகளும் வெவ்வேறு துறைகளில் ஆதரவு வழங்கி, ஈரானின் ராணுவ திறனை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ரஷ்யா, சீனா முன்னிலையில் உள்ளன. ஆனால், இந்த 2 நாடுகளும் உலகின் பெரிய பொருளாதார வல்லரசுகள் என்பதால், அவர்கள் மீது 50 சதவீத வரி விதிப்பது டிரம்புக்கு எளிதான காரியமல்ல. இந்த இரு நாடுகளையும் எதிர்கொள்வது டிரம்புக்கு கடினம். இதனால், சிறிய நாடுகளுக்கு மட்டுமே இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் இந்த 50 சதவீத வரிவிதிப்பு அறிவிப்பு உலக நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இது அந்த நாடுகளின் ஏற்றுமதியை பாதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. டிரம்ப் ஏற்கனவே ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு மூலம் பெரும் ஏமாற்றத்தை கண்டிருக்கும் வேளையில் மீண்டும் வரி விதிப்பு முறையை கையில் எடுத்துள்ளார்.