துருக்கி அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

இந்தியா மீதான தாக்குதலுக்கு துருக்கி வழங்கிய ஆயுதங்கள், டிரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது
அங்காரா,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 7ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியாவும் டிரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். 3 நாட்கள் நடந்த சண்டை பின்னர் இருதரப்பு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்குபின் 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி, அசர்பைஜான் ஆகிய 2 நாடுகளும் நேரடி ஆதரவு அளித்தன.
இந்தியா மீதான தாக்குதலுக்கு துருக்கி வழங்கிய ஆயுதங்கள், டிரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதனால், இந்தியாவில் துருக்கிக்கு எதிராக குரல் எழுந்தது. துருக்கி பொருட்களை வர்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்வதை நிறுத்தின. அதேபோல், துருக்கி சுற்றுலா செல்வதையும் இந்தியர்கள் நிறுத்தினர். ஆனால், துருக்கி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே துருக்கி எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார். தலைநகர் அங்காராவில் துருக்கி அதிபர் எர்டோகனை ஷெரீப் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், ஆயுத விற்பனை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்தியாவுக்கு எதிரான மோதல் நடைபெற்று சில நாட்களே ஆன நிலையில் துருக்கி அதிபர் எர்டோகனை பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சந்தித்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






