பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அமீரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் உயிரிழப்பு

தொழில்நுட்பக் கோளாறை சமாளிக்கும் முயற்சி தோல்வியடைந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அமீரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் உயிரிழப்பு
Published on

அபுதாபி,

அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரானின் ஏவுகணை தாக்குதல் தொடர் கிறது. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டுக்கு அமீரகம் எச்சரிக்கை விடுத்ததுடன், ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அமீரக ஆயுதப்படையினர் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அந்த படையை சேர்ந்த கேப்டன் சயீத் அல் பலூஷி மற்றும் முதல் லெப்டினன்ட் அலி அல் துனைஜி ஆகியோர் ராணுவ ஹெலிகாப்டரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திடீரென்று அந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை சமாளிக்க போராடியும் அந்த முயற்சி தோல்வியடைந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஹெலிகாப்டரை இயக்கி சென்ற சயீத் அல் பலூஷி மற்றும் அலி அல் துனைஜி ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட விபத்தில் இருவர் வீரமரணம் அடைந்துள்ளனர். அந்த 2 தியாகிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் அவர்களது குடும்பத்திருக்கு பொறுமையையும். ஆறுதலையும் அளிக்கட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பலியான விமானிகளின் உடல்கள் ஜாயித் ராணுவ மருத்துவமனை யில் பிரேத பரிசோதனைக்கு பிறகு முழு ராணுவ மரியாதையுடன், அமீரக தேசிய கொடி போர்த்தப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.

இதில் நேற்று அலி அல் துனைஜியின் உடல், சொந்த ஊரான ராசல் கைமாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கு அல் ராம்ஸ் பகுதியில் உள்ள அப்துல்லா அல் அமாஷி பள்ளிவாசலில் வைக்கப்பட்டு மதிய நேர லுகர் தொழுகைக்கு பிறகு நடந்த ஜனாஸா தொழுகையில் ராசல் கைமா ஆட்சியாளர் மேதகு ஷேக் சவுத் பின் சகர் அல் காஸிமி கலந்துகொண்டார். பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதேபோல மற்றொரு விமானி சயீத் அல் பலூஷியின் உடல் சொந்த ஊரான அல் அய்னுக்கு கொண்டு செல்லப்பட்டு அல் முவாத்தரத் அல் கபீர் பள்ளிவாசலில் லுகர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது 2 விமானிகளில் ஒருவரான அலி அல் துனைஜி கடைசியாக பேசிய குரல் பதிவு வெளியாகி அமீரகத்தில் பலரை மிக ஆழமாக நெகிழ செய்துள்ளது.

அந்த விமானியின் இறுதி வார்த்தைகள் பின்வருமாறு, "உலகங்களின் அதிபதியான இறைவனிடம் இருந்து வெகுமதி கிடைக்கிறது. நாம் தியாகிகளில் இருவராக இருக்க வேண்டும் என எழுதப்பட்டு இருந்தால், தியாகிகளாக கொல்லப்படுவோம்.

நீங்கள் நிம்மதியாக தூங்குகிறீர்கள், எங்களுக்கு அதுவே போதும்" என கூறியுள்ளார். இது பலரிடம் துக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது. பலரும் தேசத்திற்கு பெருமையுடன் சேவை செய்து வீரமரணம் அடைந்த வீரர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை பலரும் சமூக ஊடகங்களில் கவுரவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com