உக்ரைனுக்கு எதிரான போர்.. ரஷியாவுக்கு உதவிய 6 ஆயிரம் வடகொரிய வீரர்கள் பலி


உக்ரைனுக்கு எதிரான போர்.. ரஷியாவுக்கு உதவிய 6 ஆயிரம் வடகொரிய வீரர்கள் பலி
x

கோப்புப்படம்

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

மாஸ்கோ,

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவி வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

இதற்கிடையே ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் படைகள் நுழைந்தன. இதனால் எல்லையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பின்னர் ரஷியா ராணுவம் அங்கு தனது படையை குவித்தது. உக்ரைன் படைகள் தொடர்ந்து ஊடுருவியதால் நிலைமையை சமாளிக்க நட்பு நாடான வடகொரியாவின் உதவியை ரஷியா நாடியது.

இதனையடுத்து ரஷியாவுக்கு சுமார் 11 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியதாக தென்கொரியா குற்றம்சாட்டியது. முதலில் அதனை மறுத்து வந்த வடகொரியா பின்னர் ராணுவ வீரர்களை அனுப்பியதை ஒப்புக்கொண்டது. உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க குர்ஸ்க் பிராந்திய எல்லையில் அவர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை மற்றும் தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. எனவே உக்ரைனின் தாக்குதலில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடகொரியா வீரர்கள் பலியானதாக இங்கிலாந்து உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

இது அங்கு அனுப்பப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமாகும். அதேசமயம் ரஷியா மற்றும் வடகொரியா தரப்பில் இதுகுறித்து எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story