

லண்டன்,
இங்கிலாந்தில் விமான போக்குவரத்து சேவை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து நாட்டில் தினமும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் பணியில் அந்நாட்டு விமான போக்குவரத்து சேவைகள் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தின் விமான போக்குவரத்து சேவைகள் அமைப்பில் நேற்று திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டின் பர்மிங்கம், ஹிட்த்ரோ, கட்விக், மான்செஸ்டர், லுடன், பிரிஸ்டோல் நகங்களில் உள்ள விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் லட்சக்கணக்கான உள்நாடு, வெளிநாட்டு பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். விமான போக்குவரத்து சேவை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.