“ஆபரேஷன் கங்கா”: 218 இந்தியர்களுடன் டெல்லிக்கு புறப்பட்ட 9வது விமானம்..!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9-வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.
“ஆபரேஷன் கங்கா”: 218 இந்தியர்களுடன் டெல்லிக்கு புறப்பட்ட 9வது விமானம்..!
Published on

புதுடெல்லி,

போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இது தொடர்பாக அடுத்தடுத்து உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.

மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இதில் நேற்று காலையில் 249 மாணவர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 5-வது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது. இதில் பெரும்பாலும் மாணவர்களே அடங்கியிருந்தனர். இதைத்தொடர்ந்து ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் மாலை சுமார் 6 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து 7வது விமானம் 182 இந்தியர்களுடன் மும்பைக்கு பயணத்தை தொடங்கியுள்ளனர் என்றும் , எட்டாவது ஆபரேஷன் கங்கா விமானம் புதாபெஸ்டில் இருந்து புதுடெல்லிக்கு 216 இந்தியர்களுடன் புறப்பட்டதாகவும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து இருந்தார்.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளை அவர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு சிக்கியிருக்கும் மீதமுள்ள இந்தியர்களையும் விரைவில் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com