உக்ரைன் முதன்முறையாக தீவிர தாக்குதல்... ரஷியாவின் 40 விமானங்கள் அழிப்பு

ரஷியாவின் விமான தளம் ஒன்றின் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் கடுமையாக தாக்குதல் நடத்தின.
உக்ரைன் முதன்முறையாக தீவிர தாக்குதல்... ரஷியாவின் 40 விமானங்கள் அழிப்பு
Published on

மாஸ்கோ,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது.

போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், ரஷியா மீது இதுவரை இல்லாத வகையில் உக்ரைன் இன்று தீவிர தாக்குதலை தொடுத்துள்ளது. இதன்படி, கிழக்கு சைபீரியாவில் உள்ள விமான தளம் ஒன்றின் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் கடுமையாக தாக்குதல் நடத்தின.

இது எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ளது. இதனை ரஷியாவின் இர்குட்ஸ்க் பகுதியின் கவர்னர் உறுதிப்படுத்தி உள்ளார். இதேபோன்று ஸ்ரீத்னி என்ற கிராமத்தில் அமைந்த ராணுவ பிரிவின் மீதும் உக்ரைன் தாக்கியது.

சைபீரியாவின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். ரஷியாவின் விமான தளங்களின் மீது உக்ரைன் தீவிர தாக்குதல் நடத்தியதில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் டு-95 மற்றும் டு-22எம்3 ஆகிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் விமானங்களும், ஏ-50 விமானம் ஒன்றும் அடங்கும்.

இது போரில் முதன்முறையாக ரஷியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர தாக்குதலாகும். இது ரஷியாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com