உக்ரைன் போர்: அழிவின் விளிம்பில் மரியுபோல் நகரம்

உக்ரைனில் ரஷிய படைகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கீவ்,

உக்ரைனில் ரஷிய படைகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது என்றும், அந்த நகரில் சுமார் 1.60 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. ரஷிய படைகளின் உக்கிரமான தாக்குதல்களில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் உருக்குலைந்து வருகின்றன.

உக்ரைன் மீதான போரின் முதற்கட்ட இலக்கை எட்டிவிட்டதாகவும், இனி உக்ரைனின் கிழக்கு பகுதிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தபோவதாகவும் ரஷியா கூறினாலும் இன்னும் அதை செயல்படுத்தவில்லை. மாறாக உக்ரைன் நகரங்களை சுடுகாடுகளாக மாற்றும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன.

குறிப்பாக துறைமுக நகரமான மரியுபோல் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன. ரஷிய படைகளின் தொடர் குண்டு வீச்சால் மரியுபோல் நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் எலும்புகூடுகளாக காட்சி அளிக்கின்றன.

இந்த நிலையில் மரியுபோல் நகரம் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும், எனவே அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும், அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி மரியுபோல் நகரில் சுமார் 1,60,000 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பரிதவித்து வருவதாக வாடிம் போய்சென்கோ கூறினார்.

மரியுபோல் நகரில் உள்ள மக்களை வெளியேற்ற 26 பஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆனால், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ரஷிய படைகள் சம்மதிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனிடையே மரியுபோல் நகரத்துக்கு இன்னும் எந்த உதவிகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தலைநகர் கீவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள இர்பில் நகரை ரஷிய படைகளிடம் இருந்து உக்ரைன் வீரர்கள் முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அந்த நகரின் மேயர் அலெக்சாண்டர் மார்குஷின் கூறினார்.

இதற்கிடையில் ரஷிய படைகள் மீண்டும் ஒருங்கிணைந்திருப்பதாகவும், ஆனால், உக்ரைனில் அவர்களால் எங்கும் முன்னேற முடியவில்லை எனவும், அந்த நாட்டின் துணை ராணுவ மந்திரி ஹன்னா மால்யர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ரஷிய படைகள் தாங்கள் ஏற்கனவே கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களின் நிலையை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றன. கீவை கைப்பற்ற முயற்சிக்கின்றன. ஆனால் அவர்கள் எங்குமே முன்னறே முடியவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com