தென் கொரியாவில் வரலாறு காணாத வெப்பம்!

யாங்சான் நகரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது.
122 ஆண்டுகளில் இல்லாத அளவாக புதிய உச்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கோப்புப்படம்
Published on

சியோல்,

தென் கொரியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக புதிய உச்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தென் கொரியா முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கும், 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக புதிய உச்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென் கொரிய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள யாங்சான் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ),பிற்பகல் 1:26 மணியளவில் இந்த வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளது.

கடந்த 1904-ம் ஆண்டு நவீன வானிலை கண்காணிப்பு தரவுகள் சேகரிக்கத் தொடங்கப்பட்டதில் இருந்து பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். யாங்சான் நகரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அவசர கால எச்சரிக்கை

வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தென் கொரியாவின் 20-க்கும் மேற்பட்ட உள்ளூர் மாவட்டங்களுக்கு அரசு அவசர கால அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகள் பின்வருமாறு:-

அனல் காற்றின் தீவிரம் குறையும் வரை பொதுமக்கள் திறந்தவெளி வேலைகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். குளிரூட்டப்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் அல்லது அரசு அமைத்துள்ள பொது குளிர்விப்பு மையங்களில் மக்கள் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகள் ரத்து

கடுமையான வெப்ப எச்சரிக்கை காரணமாக கொரியாவின் தொழில்முறை பேஸ்பால் லீக் போட்டிகள் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பசிபிக் மற்றும் திபெத்திய உயர் அழுத்த மண்டலங்கள் கொரிய தீபகற்பத்தை ஒரு மூடி போல மூடி, வெப்பக் காற்றை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருப்பதே இந்த அதீத வெப்பத்திற்கு முக்கிய காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தாக்கம் ஆகியவை உலகளவில் இத்தகைய கடுமையான வானிலை மாற்றங்களை அடிக்கடி உருவாக்குவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com