பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்
Published on

வாஷிங்டன்,

காஷ்மீரில் துணை ராணுவம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. பயங்கரவாத தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் தோவலிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து ஜான் போல்டன் கூறும் போது, தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே அறிந்து அதனை தடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு செய்வோம். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக அவரிடம் 2 முறை பேசினேன். இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. எந்தவொரு நாடும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளது என்றார்.

இதற்கிடையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசும் போது, ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் 2002 ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தானில் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டு விட்டது. இருந்த போதிலும் அந்த இயக்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது.

2001 ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை அமெரிக்கா அறிவித்தது. எதிர்காலத்தில் அந்த இயக்கம் தாக்குதல் நடத்தாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாங்கள் அளிப்போம். பாகிஸ்தான் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஐக்கிய நாடுகள் அவையின் தடை பட்டியலில் உள்ள அமைப்புகளுக்கான நிதி மற்றும் பொருளாதார வளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என்றார்.

இருந்த போதிலும், புல்வமா தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தானிடம் நேரடியாக அமெரிக்கா முன்வைக்குமா? என்பது குறித்து எந்த விளக்கத்தையும் அமெரிக்கா அளிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com