

மாஸ்கோ,
ரஷியா-உக்ரைன் போரை நிறுத்தும் வகையில் பேச்சுவார்ததை நடத்த அமெரிக்க தூதுக்குழு ரஷியா சென்று உள்ளது. இதையடுத்து 3 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை நிறுத்த, அமெரிக்கா தற்போது புதிய அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் அடங்கிய உயர்நிலை தூதுக்குழுவினர், உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றனர்.
விமான நிலையத்தில் அவர்களை ரஷியப் பிரதிநிதி கிரில் டிமிட்ரிவ் நேரில் வரவேற்றார். அமெரிக்க அமைதித் தூதர்களின் இந்த அதிரடி வருகையையொட்டி, இரு நாடுகளும் தற்காலிக வான்வழிப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தங்களின் தரப்பிலிருந்து எந்த வான்வழித் தாக்குதல்களும் இருக்காது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் புதினும் உக்ரைன் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என ராணுவத்துக்கு 72 மணி நேர (3 நாட்கள்) தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மாஸ்கோவில் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு அமெரிக்கத் தூதுக்குழுவினர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்திக்க கீவ் நகருக்கு செல்லவுள்ளனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையில் உக்ரைனின் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளை குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.