

லாகூர்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்திற்கு நேற்று வருகை தந்தனர். இந்த குழுவில் பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான பிரதிநிதிகள் அடங்கியுள்ளனர்.
இதேபோன்று, ஈரானின் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரானின் மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி ஆகியோருடன், ஈரான் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களும் வருகை தந்துள்ளனர்.
அப்போது, காலிப் நிருபர்களிடம் கூறும்போது, அமெரிக்கர்களுடனான எங்களுடைய அமைதி பேச்சுவார்த்தை எப்போதும் தோல்வியிலும், வாக்குறுதி விதிமீறல்களிலும் முடிவடைகிறது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே அவர்கள் 2 முறை எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். எங்களுக்கு நல்லெண்ணம் உள்ளது. ஆனால், நம்பிக்கையே இல்லை என்றார்.
காலிப் பயணித்த சிறப்பு விமானத்தில், மினாப் நகரில் பலியான பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டன. இந்த விமானத்தில் என்னுடைய நண்பர்கள் உள்ளனர் என அதனை பற்றி அவர் எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோன்று, அமெரிக்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு புறப்படுவதற்கு முன்பு, அமெரிக்க துணை ஜனாதிபதி வான்சுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்போம். அவர்கள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என கூறினார். இந்த சூழலில், பாகிஸ்தானுக்கு வான்ஸ் தலைமையிலான குழுவினரும் வருகை தந்தனர்.
இந்த அமைதி பேச்சுவார்த்தையை முன்னிட்டு இஸ்லாமாபாத் நகரில் உள்ள தெருக்களை பாதுகாப்பு படையினர் தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், சாலைகளில் வாகனங்கள், ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
6 வாரங்களாக நீடித்து வரும் இந்த போரை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. அதற்கான முதல் சந்திப்பாகவும் இது அமைந்துள்ளது. இந்த அமைதி பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் தொடங்கி நடந்தது.
ஈரானின் அதிகாரிகள், அமெரிக்க குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் நடந்த நீண்ட பேச்சுவார்த்தை ஏறக்குறைய 15 மணிநேரம் நீடித்தது. இன்று அதிகாலை 3.40 மணி வரை பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இன்று 2-வது நாளாக பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பு குழுவினரும் எழுத்து வடிவிலான ஆவணங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். நடந்து முடிந்த, தொடக்க கட்ட பேச்சுவார்த்தை பதற்றங்களை தணிப்பதற்கான பெரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதனுடன், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு புரிதல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் பார்க்கப்படுகிறது. இரு தரப்பிலும், சில வேற்றுமைகள் காணப்பட்டபோதிலும் அமைதி பேச்சுவார்த்தை இன்று 2-வது நாளாகவும் தொடரும் என்று கூறப்பட்டது. எனினும், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.