அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானிலுள்ள ஈரான் அதிகாரி தகவல்

இரு தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சூழலில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை; பாகிஸ்தானிலுள்ள ஈரான் அதிகாரி தகவல்
Published on

கராச்சி

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையே ஈரான், அமெரிக்கா இடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் ஈரானின் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரானின் மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி ஆகியோருடன், ஈரான் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களும் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர்.

இந்த குழுவில் பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான பிரதிநிதிகள் இருந்தனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். 6 வாரங்களாக நீடித்த போரை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகவும், அதற்கான முதல் சந்திப்பாகவும் இது அமைந்தது.

எனினும், இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் ஏறக்குறைய 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என கூறிய வான்ஸ் தன்னுடைய குழுவினருடன் கடந்த ஞாயிற்று கிழமை காலையில் நாடு திரும்பினார்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இந்த வாரத்தில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற கூடும் என்று பாகிஸ்தானிலுள்ள ஈரான் தூதரக அதிகாரி கூறியுள்ளார். இரு தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சூழலில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோன்று, பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அமைதியை கொண்டு வருவதற்கான நடைமுறைக்கான அமைதி பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஈரானின் கப்பல்களை ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் நுழைய விடாமல் இரு பகுதிகளிலும் தடுப்பு வேலிகளை அமைத்து அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், இந்த தகவல் வெளிவந்து உள்ளது. இதனால், இரு தரப்பிலும் சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com