

ஈரானுடனான போர் காரணமாக மேற்காசியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது. இதனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா, 30 நாள்களுக்கு அனுமதி அளித்தது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும் வரி விதிக்கப்படாது என்று கூறி விலக்கு அளித்து இருந்தது.
இந்தியாவுக்கு கடந்த மார்ச் 5-ஆம் தேதி தற்காலிக அனுமதி அளித்தது. இந்தத் தடையில் இருந்து மேலும் சில நாடுகளுக்கும் அமெரிக்கா விலக்களித்திருந்த நிலையில், அது கடந்த 11-ஆம் தேதியுடன் காலாவதியானது.
இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு நிதி மந்திரி ஸ்காட் பெசன்ட், 'ரஷியா மற்றும் ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை அமெரிக்கா நீட்டிக்காது' என்று தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் ரஷியாவிடம் அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.