

தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், இந்திய பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடலுக்கு உள்ளே இருந்து குண்டுவீசி கடுமையாக தாக்கியது. இதில் அந்த கப்பல் பல துண்டுகளாக உடைந்தும், வெடித்து சிதறியும், தீப்பற்றி எரிந்தும் போனது. அந்த கப்பலை, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரான் வெளியுறவு மந்திரி அராக்சி கூறும்போது, சர்வதேச நீர்வழிகளில் எந்தவித எச்சரிக்கையும் தெரிவிக்காமல் அமெரிக்க படைகள் அராஜகத்துடன் நடந்து கொண்டுள்ளன என கூறினார்.
இந்த நிலையில், ஈரான் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஈரானின் கப்பலில் இருந்த ஊழியர் ஒருவர், அவருடைய தந்தையிடம் இதுபற்றி பேசியுள்ளார். அதில், ஈரான் கப்பலை தாக்கும் முன் அமெரிக்கா 2 முறை எச்சரித்தது என கூறியுள்ளார். கப்பலை விட்டு விட்டு வெளியேறுங்கள் என ஊழியர்களுக்கு அமெரிக்க படைகள் எச்சரித்து உள்ளன என தெரிவித்து உள்ளது.
ஆனால், ஈரான் வெளியுறவு மந்திரி அராக்சியோ சர்வதேச நீர்வழிகளில் எந்தவித எச்சரிக்கையும் தெரிவிக்காமல் அமெரிக்க படைகள் நடந்து கொண்டுள்ளன என கூறினார். இந்த சூழலில், ஈரான் செய்தி நிறுவனத்தின் தகவல் அதற்கு முரணான விசயங்களை வெளியிட்டு உள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில், கப்பலை விட்டு ஊழியர்கள் வெளியேற விடாமல் கப்பலின் கேப்டன் மறுத்து இருக்கிறார்.
உடனடி ஆபத்து நெருங்கிய சூழலில், அவர் இப்படி கூறியது சர்ச்சையானது. இதனால், கப்பல் கேப்டனுக்கும், அவருடைய சக அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு முன்பு இது நடந்துள்ளது என அந்த செய்தி தெரிவிக்கின்றது.