

வாஷிங்டன்,
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை அந்த நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அவனுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவன் விடுதலை செய்யப்பட்டான். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்ட நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, மும்பை தாக்குதலின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான ஹபீஸ் சயீத், பாகிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டியது. இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்ய வேண்டும் தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடும் விளைவு நேரிடும் என அமெரிக்காவிடம் இருந்து கடும் வார்த்தையும் செய்தி வெளிவந்து உள்ளது.
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை சட்டத்தின்படி கைது செய்து தண்டனை வழங்கவில்லை என்றால், இருதரப்பு உறவுகள் இடையே கடும் விளைவுகளை ஏற்படுத்தும், சர்வதேச நாடுகள் மத்தியில் பாகிஸ்தானின் நற்பெயரும் பாதிப்புக்குள்ளாகும்,என டிரம்ப் நிர்வாகம் எதிர்வினையை தெரிவித்து உள்ளது.